தமிழ் மாத பவுர்ணமி விரதமும்...கிடைக்கும் பலன்களும்....

தமிழ் மாத பவுர்ணமி விரதமும்...கிடைக்கும் பலன்களும்.... || tamil news tamil month Pournami viratham benefits

அமாவாசை என்பது முன்னோர்களை வழிபட முக்கியமானது என்பதுபோல், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று ஓர் விரத தினமாக அமைந்திருக்கிறது. அவை பற்றிய தொகுப்பை இங்கே காணலாம்.


Pournami Viratham

சித்திரை மாதம் பவுர்ணமியை சித்ரா பவுர்ணமி என்று சொல்வர். அன்று விரதம் இருந்து சித்ரகுப்த பூஜை செய்யப்படும்.

வைகாசி மாதம் பவுர்ணமி வைகாசி விசாகம் ஆகும். அன்று நீராடி வைசாக தானம் என்று தயிர் சாதம், பானகம், நீர் மோர் ஆகியவற்றை தானமாக கொடுப்பது சிறந்தது.

ஆனி மாதம் வளர்பிறை பவுர்ணமியில் கோபத்ம விரதம் என்று மஹா விஷ்ணுவுக்கு உகந்த விரதம் வருகிறது. அந்த விரதத்தை பெண்கள் விசேஷமாக கடைப்பிடிக்கிறார்கள்.

ஆடி மாதம் பவுர்ணமி அன்று வட சாவித்ரி விரதம் மற்ற மாநிலங்களில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஆடி மாத பவுர்ணமியில் கோகிலா விரதம் என்பதும் வட மாநிலங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆவணி மாதம் பவுர்ணமி அன்று ரட்ஷா பந்தனம் ஆகும். ரிக், யஜுர் வேதங்களுக்கு உபாகர்மம் எனப்படும் ஆவணி அவிட்டம் அனுசரிக்கப்படும்.

புரட்டாசி பவுர்ணமி அன்று உமாமஹேஸ்வர விரதம். அன்று பார்வதி பரமேஸ்வரர்களை விரதம் இருந்து பூஜிப்பதால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்று சிவ ரகசியம் குறிப்பிடுகிறது. புரட்டாசி மாத பவுர்ணமிக்கு அடுத்த நாள் முதல் தேய்பிறை முழுவதும் மஹாளயபட்சம் என்று முன்னோர்களை வழிபட வேண்டும். அதற்கு மறுநாளில் இருந்து சாரதா நவராத்திரி ஆகும். துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவிகளை கொலு பொம்மைகளில் ஆவாஹனம் செய்து ஒன்பதாவது நாள் சரஸ்வதி பூஜை அன்று சரஸ்வதியை வழிபட்டால் கல்வியில் தேர்ச்சி பெறலாம். பத்தாவதுநாள் விஜயதசமி ஆகும்.

ஐப்பசி மாதம் பவுர்ணமி அன்று எல்லா சிவன் கோவில்களிலும் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடத்தப்படும். அன்றைய தினம் கவுமுதீ ஜாகரண விரதம் என்று வட நாட்டில் விசேஷமாக அனுஷ்டிக்கப்படும். அன்று இரவில் நிலவு ஒளியில் லட்சுமி பூஜை செய்யப்படும். ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி அன்று நரக சதுர்த்தசி எனப்படும் தீபாவளி பண்டிகை நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.

கார்த்திகை மாதம் பவுர்ணமி அன்று எல்லா வீடுகளிலும், சிவாலயங்களிலும், விஷ்ணு ஆலயங்களிலும் வரிசையாக கார்த்திகை தீபம் ஏற்றப்படும். அன்றைய நாளில் தீப தானம் செய்வது பெரும் புண்ணியத்தை அளிக்கும். மகாபலிக்கு மஹா விஷ்ணு வரம் அளித்த தினம். அன்று பக்தேஸ்வர விரதம் என்று வட மாநில பெண்கள் பரமேஸ்வர பூஜை செய்வார்கள்.

மார்கழி மாதம் முழுவதும் தேவர்களுக்கு விடியற்காலம் என்பதால் அதிகாலையிலேயே எல்லா கோவில்களிலும் அபிஷேகம், பூஜை நடைபெறும். கடவுளுக்கு பொங்கல் நிவேதனம் செய்த பக்தர்களுக்கு வினியோகம் செய்வார்கள். மார்கழி மாதம் பவுர்ணமி அன்று திருவாதிரை உற்சவம். எல்லா சிவன் கோவில்களிலும் நடராஜப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். சிவகாமி அம்மையுடன் நடராஜப்பெருமானுக்கு சிதம்பரத்தில் விசேஷ அபிஷேகமும், புறப்பாடும் சிறப்பாக இருக்கும்.

தை மாதம் பவுர்ணமி அன்று தைப்பூச விழாவானது மத்யார்ஜுனம் என்ற திருவிடைமருதூர் தலத்திலும், வடலூர், பழனி முதலிய தலங்களிலும் உற்சவம் சிறப்பாக நடைபெறும். மாசி மாதம் சுக்ல பஞ்சமி ‘வசந்த பஞ்சமி’ எனப்படும். வசந்த ருது ஆரம்பிக்கப் போவதாக பார்வதி பரமேஸ்வர வழிபாடு செய்வார்கள்.

மாசி மாதம் பவுர்ணமி தினமானது மாசி மகம் ஆகும். அதற்கு பத்து நாட்கள் முன்னதாகவே உற்சவம் ஆரம்பித்து, பஞ்ச மூர்த்திகள் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வருதல் நடைபெறும். பவுர்ணமி அன்று தீர்த்தவாரி. ஆகாமாவை என்ற நான்கு முக்யமான பவுர்ணமிகளில் இதுவும் ஒன்று. மாசி மாதம் முழுவதுமே மகாஸ்நானம் என்று தினமும் நதியில் நீராடி கம்பளி, சந்தனக்கட்டை, பசு முதலான தானங்களை செய்வது புண்ணியமாக கருதப்படுகிறது. மாசி மாதம் பவுர்ணமி அன்று பன்னிரண்டு வருஷத்துக்கொரு மஹாமகம் கும்பகோணத்திலும், பிரயாகை, ஹரித்வார் முதலான இடங்களில் கும்பமேளாவும் நடக்கும் அந்த இடங்களில் நீராடிய பின்னர் தானம் செய்வது விசேஷமானது.

பங்குனி மாதம் பவுர்ணமி அன்று ஹோலிகா என்றும் ஹோலி பண்டிகை வடநாட்டில் மிக்க கோலாகலத்துடன் கொண்டாடப்படுகிறது.

Powered by Blogger.