தைப்பூசத்தில் ஆறுபடை முருகனின் அருளையும் பெற
முருகப் பெருமானுக்குரிய மிக முக்கியமான விரத நாள் தைப்பூசம் ஆகும். இது காவடி வழிபாட்டை சிறப்பிக்கும் நாள் என்பதுடன், முருகப் பெருமானுக்கு பார்வதி தேவி தன்னுடைய சக்தி அனைத்தையும் ஒன்று சேர்த்து சக்திவேலாக வழங்கிய நாளாகும். சிவ-சக்தி வடிவமான முருகப் பெருமான் ஞான வேலை பெற்ற தினம் என்பதால் இந்த நாளுக்கு சிறப்புகள் அதிகம்.
2025ம் ஆண்டில் தைப்பூச விழா பிப்ரவரி 11ம் தேதி வருகிறது. தைப்பூசம் பெருவிழா நெருங்கி வருவதால் ஏராளமான பக்தர்கள் முருகனை வேண்டி தைப்பூச விரதம் இருக்க துவங்கி விட்டனர். சிலர் 48 நாட்கள் முருகனுக்கு தைப்பூச விரதம் இருந்து வருகின்றனர். 48 நாட்கள் விரதம் இருக்க முடியாதவர்கள் 21 நாட்களும் விரதம் இருந்து வருகின்றனர். இன்னும் சிலர் தை மாதம் பிறந்தது முதலே முருகப் பெருமானுக்கு மாலை அணிந்தும், மாலை அணியாமலும் விரதம் இருந்து வருகின்றனர்.
தை மாதம் துவங்குவதற்கு முன்பு இருந்தே ஏராளமான முருக பக்தர்கள் பழனிக்கும், திருச்செந்தூருக்கும் மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர். சமீப காலமாகவே அனைத்து முருகன் கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதி வருகிறது. இந்நிலையில் தைப்பூச விரதம் வேறு நெருங்கி வருவதால் முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளுக்கும் பக்தர்கள் படையெடுக்க துவங்கி விட்டனர். கோவிலுக்கு செல்ல முடியா விட்டாலும் வீட்டில் இருந்த படியே பலர் தைப்பூச விரதம் இருந்து வருகிறார்கள். இன்னும் சிலரால் விரதம் இருக்க முடியாத சூழல் கூட ஏற்பட்டிருக்கலாம். இவர்கள் அனைவரும் ஆறுபடை வீடு முருகனின் அருளை பெறுவதற்கு தைப்பூசத்தன்று எளிய பரிகாரத்தை செய்யலாம்.
ஒவ்வொரு தெய்வத்திற்கும் தனியாக கவசப் பாடல், காயத்ரி மந்திரம் இருப்பது போல் முருகப் பெருமானுக்கு என்று காயத்ரி மந்திரம் உள்ளது. இது தவிர ஆறுபடை வீடு முருகனுக்கும் தனித்தனியாக காயத்ரி மந்திரங்கள் உள்ளன. மந்திரங்களில் மிகவும் புனிதமான, உயர்வானதாக சொல்லப்படும் காயத்ரி மந்திரத்தை சொலவதால் அளவில்லாத பலன்கள் கிடைக்கும். அப்படி ஆறுபடை வீடு முருகனின் அருளை பெறுவதற்கு ஆறுபடை வீடு முருகனுக்கும் உள்ள காயத்ரி மந்திரங்களை தலா 12 முறை சொல்வது சிறப்பு. வீட்டில் முருகன் படத்திற்கு முன் விளக்கேற்றி வைத்து இந்த மந்திரங்களை சொல்லுவதால் முருகனின் அருள் கிடைக்கும்.