பித்ரு தோஷம் போக்கும் ஈசன்!
பரிகார தலங்களில் ஒன்றாக திருச்சி மாவட்டம் குணசீலத்தில் உள்ள தார்மீகநாதர் கோவில் அமைந்துள்ளது. இது பித்ரு தோஷ பரிகார தலமாகவும், தோல் நோய்களை தீர்க்கம் தலமாகவும் விளங்குகிறது. இந்த தலத்தில் சிவன், நந்தி, முருகன் ஆகியோர் வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுவது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
சிவ பெருமான் பிளவுபட்ட திருமேனியாக காணப்படுவதாலும், இது சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட திருமேனி என்பதாலும் கேட்டவர்களுக்கு கேட்ட வரங்களை தரும் தெய்வமாக தார்மீக நாதர் திகழ்கிறார்.
குணசீலம் தார்மீக நாதர் ஆலயம் :
சிவ பெருமான் பல வித்தியாசமான ரூபங்களில் காட்சி தரும் தலங்கள் பல உள்ளன. ஆனால் பிளவுபட்ட நிலையில் இருக்கும் லிங்க திருமேனி, இரு கால்களையும் மடக்கி நிலையில் இருக்கும் நந்தி, முருகனுக்கு இடப்புறம் இருக்கும் மயில் என பல வித்தியாசமான அமைப்புக்களைக் கொண்ட கோவிலாக அமைந்துள்ளது குணசீலம் தார்மீக நாதர் ஆலயம்.
கோவில் விபரம் :
மூலவர் : தார்மீகநாதர்
தாயார் : ஹேமவர்ணேஸ்வரி
தல விருட்சம் : வில்வம்
தல வரலாறு :
2000 ஆண்டுகள் பழமையானது குணசீலத்தில் உள்ள தார்மீகநாதர் ஆலயம். பெரும் மழை, வெள்ளத்தில் எங்கிருந்தோ காவிரி வெள்ளத்தில் அடித்து வரப்பட்டது இத்தலத்தில் மூலவர் திருமேனி. வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட லிங்க திருமேனி இரண்டாக பிளந்தது. காவிரியின் வடகரையில் ஒரு பகுதியும், தென்கரையில் ஒரு பகுதியும் ஒதுங்கின. வடகரையில் ஒதுங்கிய லிங்கத்தின் ஒரு பகுதியை எடுத்த சித்தர் ஒருவர், ஒரு இடத்தில் பிரதிஷ்டை செய்து, சிறிய ஆலயம் அமைத்தார். காலப்போக்கில் இந்த ஆலயம் படிப்படியாக வளர்ந்து, பல மன்னர்களால் திருப்பணிகள் செய்யப்பட்டு தற்போது குணசீலத்தில் உள்ள தார்மீக நாதர் ஆலயமாக மாறி உள்ளதாக செவி வழி வரலாறாக சொல்லப்படுகிறது.
கோவில் அமைப்பு:
கிழக்கு நோக்கி அமைந்திருந்தாலும் இக்கோவிலின் நுழைவு வாயில் தெற்கு நோக்கியதாகவும் அமைந்துள்ளது. மகாமண்டபத்தின் வலது புறம் ஹேமவர்ணேஸ்வரி சன்னதி அமைந்துள்ளது. தாயார் நின்ற கோலத்தில் தென்திசை நோக்கி, இரு கரங்களிலும் அபய வரத ஹஸ்த முத்திரைகளுடன் அருள்பாலிக்கிறாள். மகாமண்டபத்தின் இடது புறம் கற்பக விநாயகரும், வலது புறம் சண்முகர், வள்ளி - தெய்வானையுடன் காட்சி தருகின்றனர். கருவறையில் உள்ள தார்மீகநாதரின் பிளவுபட்ட பகுதி பின்புறம் உள்ளதால், தரிசனம் செய்யும் போது நமக்கு எந்த வேறுபாடும் தெரியாது. மூலவர் தார்மீகநாதர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். தேவ கோட்டத்தில் தட்சிணாமூர்த்தியும், சிவ துர்க்கையும் அருள்பாலிக்கிறார்கள். திருச்சுற்றில் வடக்கில் சண்டிகேஸ்வரரும் வடகிழக்கு மூலையில் நவக்கிரக சன்னதியும், கிழக்கில் காலபைரவரும் அருள் செய்கிறார்கள்.
கோவில் சிறப்புக்கள் :
கால் மடக்கிய நந்தி:
பொதுவாக சித்தர்கள் நடமாட்டம் இருந்தாலோ அல்லது கோவிலுக்கு உதவி இருந்தாலோ நந்தியின் அமைப்பு மாறுபட்டதாக இருக்கும். அதே போல் இங்கு நந்தி பகவான் இரண்டு கால்களையும் மடக்கிய நிலையில் காட்சி தருகிறார்.
வலது புறத்தில் மயில்:
பொதுவாக முருகப் பெருமானுக்கு வலது புறத்தில் தான் அவரது வாகனமான மயிலின் தலை அமைந்திருக்கும். ஆனால் இந்த தலத்தில் அரிதாக மயிலின் தலைப்பகுதி முருகனின் இடது புறம் காணப்படும். இங்குள்ள முருகப்பெருமானின் பின்புறம் உள்ள திருவாசி கல்லால் செய்யப்பட்டதாகும். இது இறைவனுடன் இணைந்தே இருப்பது தனிச்சிறப்பாகும்.
பிரார்த்தனை :
இத்தல அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் தோல் தொடர்பான வியாதிகள் குணமாகும் என சொல்லப்படுகிறது. துர்க்கைக்கு வெள்ளிக்கிழமைகளில் ராகு கால நேரத்திலும், தண்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளிலும், காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியிலும் சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன.
பித்ரு தோஷ பரிகாரம் :
இது பித்ரு தோஷ நிவர்த்தி தலமாகும். பித்ரு தோஷம் உள்ளவர்கள் முதல் நாள் இரவு இங்கு வந்து தங்குகிறார்கள். அதிகாலையில் குளித்து முடித்து ஆலயத்திற்கு பூமாலை, அர்ச்சனை பொருட்களுடன் வந்து, இறைவனுக்கு அர்ச்சனை செய்கிறார்கள். அர்ச்சனை முடிந்ததும் தோஷம் உள்ளவர்கள் கழுத்தில் ஒரு மாலையை சூட்டி, தாயார் சன்னதிக்கு அழைத்து செல்கிறார்கள். அங்கும் அர்ச்சனை செய்த பிறகு அன்னையில் கையில் உள்ள ரட்சையை (கயிறு) கொண்டு வந்து தோஷ பாதிப்பு உள்ளவர் கையில் கட்டுகிறார்கள். தொடர்ந்து சுவாமி - தாயார் சன்னதிகளை 12 முறை வலம் வர வேண்டும். பிறகு சுவாமி சன்னதி முன் அமர்ந்து குறைந்தது 12 நிமிடங்களாவது தியானம் செய்ய வேண்டும். இப்படி செய்வதால் பித்ரு தோஷம் முழுவதும் நீங்குவதாக ஐதீகம்.
திருவிழாக்கள் :
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விதவிதமான அலங்காரத்தில் அம்பாள் காட்சி தருவாள். பத்தாம் நாள் திருவிழாவின் போது இறைவன் - இறைவி அம்பு போடும் வைபவம் நடைபெறும். முருகப் பெருமானுக்கு மாத கிருத்திகை மற்றும் சஷ்டி தினங்களில் சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுகிறது. கார்த்திகை மாத சோம வாரங்களில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மூலவர் தார்மீகநாதர் பத்ம பீடத்தில் காட்சி அளிக்கிறார் இவருக்கு ஐப்பசி பெளர்ணமியில் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
கோவில் அமைவிடம் :
திருச்சி - முசிறி சாலையில் திருச்சியில் இருந்து 16 கி.மீ., தூரத்திலும், முசிறியில் இருந்து 12 கி.மீ., தூரத்திலும் குணசீலத்தில் இந்த ஆலயம் உள்ளது.
கோவில் திறந்திருக்கும் நேரம் :
காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.
கோவில் முகவரி :
ஸ்ரீ ஹேமவர்னேஸ்வரி அம்மன் உடனுறை தார்மீகநாதர் சுவாமி திருக்கோவில்,
குணசீலம், முசிறி வட்டம்,
திருச்சி மாவட்டம்.