திருவூரகம் உலகளந்த பெருமாள் கோவில், காஞ்சிபுரம் - 108 திவ்ய தேசம் 50 வது கோவில்

திருமாலின் 108 திவ்ய தேச கோவில்களில் ஒரு சில இடங்களில் மட்டுமே திரிவிக்கிரமனாக, ஓங்கி உலகளங்க திருக்கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார். அப்படி மகாபலி மன்னருக்காக திரிவிக்ரம கோலத்தை பெருமாள் காட்டிய தலம் காஞ்சிபுரம் அருகில் உள்ள திருவூரம் உலகளந்த பெருமாள் கோவிலாகும்.

திருவூரகம் உலகளந்த பெருமாள் கோவில், காஞ்சிபுரம் - 108 திவ்ய தேசம் 50 வது கோவில்


திருமாலின் ஆதிசேஷன் ரூபமாகவும் மகாபலிக்கு காட்சி கொடுத்ததால், பாம்பின் வடிவமாகவும் இங்கு காட்சி தருகிறார். அதன் காரணமாகவே இந்த தலம் திருவூரகம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இங்கு நாக சதுர்த்தில நாக பஞ்சமி போன்ற விழாக்களின் போது விசேஷ பூஜைகள் நடத்தப்படுகிறது.

உலகளந்த பெருமாள் கோவில் :

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்த திருமாலின் திவ்ய தேச கோவில்களில் திருவூரகம் உலகளந்த பெருமாள் கோவில் 50 வது திவ்ய தேச கோவிலாக போற்றப்படுகிறது. இத்தலம் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகும். காஞ்சிபுரத்தில் உள்ள மிக பழமையான விஷ்ணு ஆலயங்களில் இதுவும் ஒன்றாகும்.

கோவில் தனிச்சிறப்புகள் :

* ஆதிசேஷனாக காட்சி தரும் பெருமாள்.

* ஆதிசேஷனை வணங்கினால் குழந்தைப்பேறு கிடைக்கும்.

* ஒரே கோவிலில் பெருமாளின் இரு ரூபங்களை தரிசிக்கலாம்.

கோவில் விபரங்கள் :

* மூலவர் : உலகளந்த பெருமாள், திரிவிக்கிரமப் பெருமாள்

* உற்சவர் : பேரகத்தான்

* தாயார் : அமுதவல்லி நாச்சியார், ஆரணவல்லி, அம்ருதவல்லி

* தீர்த்தம் : நாக தீர்த்தம்

* விமானம் : ஸாகர ஸ்ரீகர விமானம்

* கோலம் : நின்ற திருக்கோலம்

தல வரலாறு :

பிரகலாதனின் பேரனும் அசுரர்களின் அரசனுமான மகாபலி, தேவலோக பதவி அடைய வேண்டும் என்பதற்காக யாகம் ஒன்றை நடத்தினான். அப்போது வாமன ரூபத்தில் வந்து மூன்றடி நிலம் கேட்கிறார் பெருமாள். தனது குருவான சுக்ராச்சாரியார் தடுத்தும் மூன்றடி நிலம் கொடுக்க ஒப்புக் கொள்கிறான் மகாபலி. கமண்டல தண்ணீரை கையில் ஊற்றியதும் வானத்திற்கும் பூமிக்கும் வளர்ந்து நின்ற திருமால், முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்தார். மூன்றாவடி அடி எங்கே என மகாபலியிடம் கேட்க, அவர் தனது தலையில் வைக்கும் படி காட்டுகிறார்.

உடனடியாக மகாபலியின் தலையில் கால் வைத்து அவரை பாதாள லோகத்திற்கு அனுப்பி வைக்கிறார் பெருமாள். ஆனால் பெருமாளின் திரிவிக்ரம கோலத்தை காண முடியவில்லை என வருந்திய மகாபலி, பெருமாளின் திரிவிக்ரம கோலத்தை காண வேண்டி தவம் செய்கிறார். அவரது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள், இந்த தலத்தில் உலகளந்த பெருமாளாக காட்சி தருகிறார். ஆனாலும் பெருமாளின் திருக்கோலத்தை மீண்டும் காண ஆசைப்பட்ட மகாபலிக்கு ஆதிசேஷனாக காட்சி அளித்தார் பெருமாள்.

கோவில் அமைப்பு :

1000 முதல் 2000 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் ஸாகர ஸ்ரீகர விமானத்தின் கீழ் ஒரு காலை தூக்கியபடி உலகளந்த பெருமாள் காட்சி தருகிறார். மூலவருக்கு இடப்புறத்தில் ஆதிசேஷன் தனி சன்னதியில் காட்சி தருகிறார். தாயார் அமுதவல்லி நாச்சியார் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். திருமங்கை ஆழ்வார் இத்தல பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார். ஆதிசேஷன், மகாபலி ஆகியோர் இத்தலத்திற்கு வந்து பெருமாளை வழிபட்ட சென்றதாக வரலாறு சொல்கிறது.

பிரார்த்தனை :

இத்தலத்தில் உள்ள ஆதிசேஷனுக்கு திருமஞ்சனம் செய்து, பால் பாயாசம் படைத்து, வழிபட்டால் குழந்தைப் பேறும் நிச்சயம் கிடைக்கும். அதனால் குழந்தை பாக்கியம் வேண்டி ஏராளமானோர் இக்கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்கிறார்கள்.

திருவிழாக்கள் :
வைகுண்ட ஏகாதசி விழா இத்தலத்தில் சிறப்பாக நடைபெறுகிறது.

அமைவிடம் :

பெரிய காஞ்சிபுரத்தில் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு மிக அருகிலேயே இக்கோவில் அமைந்துள்ளது.

முகவரி :

உலகளந்த பெருமாள் கோவில்,
திருவூரகம், காஞ்சிபுரம் மாவட்டம்.

தொலைப்பேசி - +91- 9443597107, 98943 88279
Powered by Blogger.