தச ஆஞ்சநேயர் தரிசனம்!

வியாசராஜர்-பக்த பிரகலாதனின் அவதாரம். இவர் தன் வாழ்நாளில் 732 ஆஞ்சநேய மூர்த்தங்களை உருவாக்கினாராம். அவர், தன்னிடம் உள்ள அங்கார கட்டியைக் கொண்டு பாறை மீது அனுமன் ஓவியத்தை வரைய, அதுவே அனுமன் சிலையாகிவிடுமாம்! தமிழகத்தில் தாராபுரத்தில் வியாசராஜர் பிரதிஷ்டை செய்த 10 ஆஞ்சநேய மூர்த்திகள் உண்டு. அவற்றில் தாராபுரம் காடு ஹனுமந்தராய சுவாமி கோயில் குறித்த கட்டுரை சக்தி விகடன் 23.3.21 இதழில் வெளியானது. அதைப் படித்து மகிழ்ந்த வாசகர்கள் மீதமுள்ள 9 அனுமன் மூர்த்தங்கள் குறித்தும் வெளியிடலாமே என்று கேட்டிருந்தனர். அவர்களுக்காக தாராபுரம் தச ஆஞ்சநேயர் தரிசனம் இங்கே. இந்தப் பக்கத்தில் நீங்கள் தரிசிப்பது காடு ஹனுமந்தராய சுவாமி. மற்ற அனுமன் மூர்த்தங்கள் அடுத்து வரும் பக்கங்களில்...

பீமராய அக்ரஹார ஆஞ்சநேயரும் அரச மரத்தடி ஆஞ்சநேயரும்


தாராபுரம் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டாவது சிக்னலில் திரும்பினால் பீமராயர் தெருவை அடையலாம். வீரராகவபுர அக்ரஹாரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது, அங்கிருந்தோர் இந்த அக்ரஹாரத்துக்கு வந்து குடியேறினராம். இங்கு சிறிய சந்நிதியில் ஓர் ஆஞ்சநேயரும் திறந்தவெளியில் அரச மரத்தடியில் மற்றொரு வியாசராஜ ஆஞ்சநேயரும் காணப்படுகின்றனர். நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் அன்பர் ஒருவரே இங்கு தன்னார்வலராக பூஜை செய்து வருகிறார். ஆகவே, காலையிலேயே சீக்கிரமாக பூஜைகளை முடித்துப் பூட்டிவிடுகிறார். இப்படிப்பட்ட தன்னார்வலர்களால்தான் இதுபோன்ற ஆலயத்தில் வழிபாடுகள் தடையின்றி நடைபெறுகின்றன என்பதையும் மறுக்க முடியாது.
மகான் குருபக்தி நிதி தீர்த்தரின் பிருந்தாவனம்

பீமராய அக்ரஹார ஆஞ்சநேயரும்


இங்கே தனி சந்நிதியில் மகான் குருபக்தி நிதி தீர்த்தரின் பிருந்தாவனம் காணப்படுகிறது. இவரே 1903 -ம் ஆண்டு பிளேக் நோயின் காரணமாக ஆலயங்கள் பூட்டிக்கிடந்தபோது காடு ஆஞ்சநேய சுவாமி ஆலயத்தைத் திறந்து வழிபாடுகளைத் தொடங்கியதாகக் கூறுகின்றனர்.


விராடபுரமும் உத்தரவுபெருமாளும்!



விராடபுரம் என்பதே தாராபுரத்தின் பழைய பெயர். இலாடபுரம், பராந்தகபுரம், ராஜராஜபுரம் என்னும் பெயர்களும் உண்டு. இத்தலம் பாண்டவர்கள் ஓராண்டு அஞ்ஞாத வாசம் இருந்த இடமாக நம்பப்படுகிறது. இங்குள்ள உத்தர வீரராகவ பெருமாள் விராட அரசருக்கும் அவருக்குப் பின் வந்த ராஜ பரம்பரையினருக்கும் தெய்வமாக விளங்கியவர். இவரிடம் உத்தரவு பெற்ற பிறகே அரசர்கள் அரியணை ஏறியதால், இவர் `உத்தரவு வீரராகவ பெருமாள்' என்றும் அழைக்கப்பட்டார்.


மகான் குருபக்தி நிதி தீர்த்தரின் பிருந்தாவனம்


பெருமாள் இங்கு தன் பிராட்டியர் இன்றி தனியாக சேவை சாதிக்கிறார். பெருமாளின் திருக்கரங்களில் காணப்படும் சங்கும், சக்கரமும் இங்கு அவரின் மார்பில் காணப்படுவது விசேஷம். பெருமாள் குடியிருக்கும் இந்த ஆலயம் அரசர்கள் வாழ்ந்த தாராபுரம் கோட்டைப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கிருந்து மந்த்ராலய மஹானின் மூல பிருந்தாவனம் நேர் கோட்டில் அமைந்துள்ளது இந்த ஆலயத்தின் சிறப்பம்சம் என்கிறார்கள். இங்கு வீர ஆஞ்சநேயர், கோட்டை வாசல் ஆஞ்சநேயர் ஆகியோரை தரிசிக்கலாம்.

கோட்டைவாசல் ஆஞ்சநேயர்


உத்தர வீரராகவப் பெருமாள் ஆலயத்துக்கு அருகிலேயே உள்ளது இந்த ஆஞ்சநேயர் சந்நிதி. இதன் அருகிலேயே விஜயநகரப் பேரரசர்கள் காலத்தைச் சேர்ந்த மிக அழகிய 16 கால் மண்டபம் காணப்படுகிறது. பராமரிப்பின்றி காணப்படும் இந்த மண்டபத்தில் கற்றாழைச் செடிகள் மண்டிக்கிடக்கின்றன. 

கோட்டை வாசல் ஆஞ்சநேயர்


அழகிய குழந்தை முகம் கொண்டு, வடக்கு நோக்கிப் பாதங்களை வைத்தபடி உத்தர வீரராகவ பெருமாளை நோக்கித் திரும்பிய கோலத்தில் காட்சி அருள்கிறார் இந்த ஆஞ்சநேயர். தலையில் கிரீடமின்றி, நீண்ட காதுகளில் குண்டலங்கள் அணிந்து, மார்பில் வியாசராஜரின் முத்ரிகையான யாளியுடன் காணப்படுகிறார். வலது கரம் அபய ஹஸ்தமாகவும் இடது கரம் சௌகந்திகா மலர் ஏந்தியும் காணப்படுகின்றன.

வீர ஆஞ்சநேயர்


உத்தரவு வீரராகவ பெருமாள் ஆலயத்தினுள் தனிச் சந்நிதி கொண்டுள்ளார் வீரஆஞ்சநேயர். இவர் தெற்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். வியாசராஜ அனுமன் மூர்த்தத்தில் கையில் சௌகந்திகா மலர் திகழ்வது வழக்கம் என்று பார்த்தோம் அல்லவா. ஆனால், இந்த அனுமன் தம்முடைய திருக்கரத்தில் மலர் கொத்தை வைத்திருக்கிறார். தலைக்கு மேல் உயர்ந்திருக்கும் வாலில் மணி காணப்படுகிறது. சிற்பத்தில் சங்கு, சக்கரம், நாமம் ஆகியவை அமைந்திருக்கின்றன. வியாசராஜர் உருவாக்கிய ஆஞ்சநேய மூர்த்தங்கள் முதலில் திறந்த வெளியிலேதான் பிரதிஷ்டை செய்யப்பட்டன.


வீர ஆஞ்சநேயர்


காலப்போக்கில் சிலவற்றுக்கு ஆலயங்கள் அமைக்கப்பட்டன. அவ்வாறே 2004-ம் ஆண்டு வீரஆஞ்சநேயருக்கு ஆலயம் அமைக்கப்பட்டது என அறிய முடிகிறது.

வீரராகவ அக்ரஹார ஆஞ்சநேயர்


தாராபுரத்தின் மிகப் பழைமையான அக்ரஹாரம் இது. காலப்போக்கில் அமராவதி நதியில் வெள்ளத்தால் அக்ரஹாரம் அடித்துச் செல்லப்பட, இங்கிருந்த மக்கள் மேடான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர். ஆலயம் மட்டும் வழிபாடின்றிச் சிதைந்து, கர்ப்பகிரத்தின் உள்ளே புகுந்த அரச மர வேர்களால் மேற்கூரை பாதிக்கப்பட்டு, இன்று பாம்புகளின் புகலிடமாக விளங்குகிறது. அரை கிலோமீட்டர் தூரம் வயல் வரப்புகளின் மீது நடந்தே இந்த ஆலயத்துக்குச் செல்ல முடிகிறது.


வீரராகவ அக்ரஹார ஆஞ்சநேயர்


ஒரு காலத்தில் சீரும் சிறப்புமாய் நான்கு ஆஞ்சநேயர்களுடன் விளங்கிய ஆலயத்தில் இன்று ஒருவர் மட்டுமே இருக்கிறார். எண்ணெய் கண்டு பல ஆண்டுகள் ஆன தோற்றத்தில் மனத்தை உலுக்குகிறது ஆஞ்சநேய சுவாமியின் திருக்கோலம். இருண்ட கருவறை, காரை பெயர்ந்த சுவர்கள், மேற்கூரையிலிருந்து பெயர்ந்த சரிந்த கற்கள் எனத் திகழ்கிறது இவரின் சந்நிதி.


சந்நிதிக்குள் சிறிய மூர்த்தமாக வியாசராஜ ஆஞ்சநேயர் காட்சி அருள்கிறார். நெற்றியில் இயற்கையாகவே கோபி சந்தனம் போன்ற அமைப்பு, இடுப்பில் யாளி முத்ரிகை, உயர்ந்த வாலிலே மணி, அபய ஹஸ்தம் மற்றும் சௌகந்திகா மலரேந்திய கரங்கள் என அற்புதத் திருக்கோலம். இங்கிருக்கும் பாம்புகளே இவரின் காவலர்கள் என்பதுபோன்ற எண்ணம் மனத்தில் எழுகிறது.


வழிபாடுகள் ஏதும் இந்த ஆஞ்சநேயருக்கு நடைபெறுவதில்லை என்றாலும் மக்கள் இன்றும் இங்கு வந்து ஆலயத்திற்கு வெளியே பொங்கலிட்டுச் செல்வதைக் காணலாம். இப்பகுதி பக்தர்கள்

இங்கு ஆலயம் புனரமைக்கப்பட்டு மீண்டும் வழிபாடுகள் தொடரவேண்டும் என்று விரும்புகிறார்கள்.

வீராச்சி மங்கலம் ஆஞ்சநேயர்


விராஜிமங்கலம் என்று வழங்கப்பட்ட இவ்வூர் இன்று வீராச்சிமங்கலம் என மாறியிருக்கிறது. இது தாராபுரத்திலிருந்து ஆறு கி.மீ தொலைவில் உள்ளது. இங்குள்ள வியாசராஜ ஆஞ்சநேயர் சிவன் கோயிலுக்கு அருகே தனிச் சந்நிதி கொண்டுள்ளார். தற்போது சிவன் கோயிலில் பாலாலயம் செய்யப்பட்டுப் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் ஆஞ்சநேயர் சந்நிதி மட்டும் அப்படியே உள்ளது.


வீராச்சி மங்கலம் ஆஞ்சநேயர்



இங்கு பூஜை செய்து வரும் பெரியவர் நம்பெருமாள் பட்டர் 80 வயதுக்கும் மேற்பட்டவர். இந்த வயதிலும் சலிக்காமல், யார் எப்போது தரிசனத்துக்கு வந்தாலும் கோயிலைத் திறந்து சேவிக்க வழி செய்கிறார். பக்தர்கள் வரவு குறைவு ஆதலால் அன்றாடச் செலவுகளுக்குக்கூட இந்த ஆலயத்தில் வருமானம் இல்லை என்பதே இன்றைய நிலை!


தெப்பக்குள ஆஞ்சநேயரும் அமராவதி ஆஞ்சநேயரும்

இந்த ஆஞ்சநேயர்கள் அமராவதி ஆற்றோரமாக வயல்களுக்குள் திறந்தவெளியில் ஏகாந்தமாக வீற்றிருக்கிறார்கள். வயல்களில் அறுவடை முடியும் காலத்தில் மட்டுமே இவர்களை தரிசிக்க முடியும். இவர்களை பக்தர்கள் எப்போதும் சென்று தரிசித்து மகிழ வசதியாக, உரிய ஏற்பாடுகளைச் செய்யும் முயற்சிகளில் இவ்வூரின் இளைஞர்கள் ஈடுபட்டிருப்பது மகிழ்ச்சி.

தளவாய்பட்டினம் ஆஞ்சநேயர்


தளவாய்பட்டினம் தாராபுரம் நகரிலிருந்து பத்து கி.மீ தொலைவில் உள்ளது. இங்குள்ள வரதராஜ பெருமாள் ஆலயத்தில் வியாசராஜ அனுமன் தனிச் சந்நிதி கண்டருள்கிறார். இவரும் வீரராகவபுரம் மற்றும் பீமராய அக்ரஹாரத் தில் உள்ளது போல் சிறிய அளவினராகவே விளங்குகிறார்.


தளவாய்பட்டினம் ஆஞ்சநேயர்



பக்தர்கள் கவனத்துக்கு...


பீமராய அக்ரஹாரம் மற்றும் தளவாய்பட்டினம் ஆலயங்கள் வார நாள்களில் சீக்கிரம் மூடப்பட்டுவிடும். ஆகவே, தாராபுரம் தச ஆஞ்சநேயர்களை தரிசிக்க விரும்பும் அன்பர்கள், முதலில் இந்தச் சந்நிதிகளை தரிசிப்பதுபோல் திட்டமிடலாம்.


தொடர்ந்து காடு ஹனுமன், உத்தர வீரராகவப் பெருமாள் ஆலய அனுமங்களை தரிசிக்கலாம். வீராச்சிமங்கலம் மற்றும் அரசமரத்தடி ஆஞ்சநேயர்களை எப்போதும் தரிசிக்கலாம்.

அமராவதி ஆற்றோரமாக உள்ள அனுமன் இருவரையும் அறுவடைக் காலத்தில் மட்டுமே தரிசிக்க இயலும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

இந்த ஆலயங்களுக்குச் செல்லும்போது தங்களால் இயன்ற பூஜைப் பொருள்களை எடுத்துச் சென்றால் மிக உபயோகமாக இருக்கும். வியாசராஜர் பிரதிஷ்டை செய்த தச அனுமன்கள் தரிசனம் செய்து வழிபட்டால், அனைத்துவிதமான சிரமங்களும் நீங்கி அமைதியும் ஆனந்தமுமான வாழ்வைப் பெறலாம் என்பது ஐதிகம். எனவே வாய்ப்பிருப்பவர்கள் தாராபுரம் சென்று தச ஆஞ்சநேயர்களையும் வழிபட்டு வாருங்கள்.

Powered by Blogger.