முருகன் எனும் மாமருந்து!

முழு நிலவோடு பொலியும் வைகாசி விசாகம் ஆறுமுகனின் அவதார நன்னாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. `விசாகம் ஸர்வ பூதானாம் ஸ்வாமினம் கிருத்திகா சுதம்’ என்று வடமொழியும் `இன்சொல் விசாகா க்ருபாகர’ என்று தென்மொழியும் கந்தனைப் போற்றிப் புகழ்கின்றன.

கந்தனின் கதையும் அவன் குறித்த வழிபாடுகளும் நம் வாழ்வுக்கு வரமாகும்; அவனைப் பாடும் துதிப்பாடல்களோ நம் உள்ளப் பிணியையும் உடற்பிணியையும் போக்கும் மாமருந்தாகும். `ஆறு தாங்கிய ஜோதியான முருகன் ஆறெழுத்து மந்திர மூர்த்தி, ஆறுதலைக் கொடுக்கும் ஆறுமுகன் - அறுபடை வீரன்’ என்பது காஞ்சி மகாபெரியவரின் அருள்வாக்கு.

ஆம், குமரக்கடவுளின் சிறப்புகள் பலவும் ஆறாகவே திகழ்வது மிகவும் சிறப்பு. நாமும் அவற்றை அறிந்து மகிழ்வோம்.


Lord Murugan with Valli Deivaanai


* விசாக நட்சத்திரம் ஆறு நட்சத்திரங்களின் கூட்டம் என்கின்றன ஜோதிடநூல்கள். சிவனாரிடமிருந்து புறப்பட்ட ஆறு பொறிகள், சரவணப் பொய்கையில் ஆறு கமலங்களில் ஆறு குழந்தைகளாகத் தவழ்ந்தன. அவர்களை வளர்த்த கார்த்திகைப் பெண்கள் அறுவர். இந்தத் திருக்கதை குறித்து... `திருமுகங்கள் ஆறாகிச் செந்தழற்கண் ஆறும் ஒருமுகமாய் தீப்பொறி ஆறு உய்ப்ப அறு மீன்முலை உண்டுஅமுது விளையாடி...’ என கந்தர்கலி வெண்பாவில் போற்றுகிறார் குமரகுருபரர்.

* கச்சியப்பர் கந்தபுராணத்தை ஆறு காண்டங்களாகவே அமைத் துள்ளார். அவை: சம்பவ காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவ காண்டம், தட்ச காண்டம்.

* வடிவேலனின் புகழைப் பாடும் அருணகிரியாரின் நூல்களின் எண்ணிக்கையும் ஆறுதான். அவை: திருப்புகழ், திருவகுப்பு, கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி, வேல்மயில் சேவல் விருத்தம். அருணகிரியாரை தன் ஆசானாக பாவித்து பாம்பன் சுவாமிகள் பாடிய பாடல்கள் 6,666.

* அறுபடை வீடுகள் முருகனுக்குச் சிறப்பு. அவற்றை அருணகிரியார் தத்துவமுறையில் போற்றுகிறார். உல்லாச, நிராகுல, யோக, இத, சல்லாப, விநோதன் என்கிறது கந்தர் அனுபூதி

* முருகனுக்கு உகந்த சஷ்டி, திதிகளில் 6-வது திதி. கிழமைகளில் 6-வதான வெள்ளிக்கிழமையில் சுப்ரமணியரை விரதமிருந்து வழிபடுவது மிகவும் சிறப்பாகும். இதை சுக்ரவார விரதம் எனச் சிறப்பிக்கின்றன சாஸ்திர நூல்கள்.

* சனகாதி முனிவர்கள் நால்வருக்கு ஈசன் உபதேசித்தது போல், திருப்பரங்குன்றத்தில் பராசர முனிவரின் மகன்களான தப்தர், அனந்தர், நந்தி, சதுர்முகர், சக்ரபாணி, மாலி ஆகிய அறுவருக்குக் கந்தன் உபதேசித்தார் என்கிறது கந்தபுராணம்.

* திருச்செந்தூரில் முருகனின் நடனம் கண்டு மகிழ்ந்த அருணகிரி நாதர் `தண்டையணி வெண்டையம்’ எனும் பாடலில் முருகனின் சரணார விந்தங்களில் சப்திக்கும் அணி வகைகள் ஆறு என்கிறார். அவை: தண்டை, வெண்டையம், கிண்கிணி, சதங்கை, கழல், சிலம்பு.

* முருகனைக் கொண்டாடும் பண்டிகைகள் ஆறு: வைகாசி விசாகம், ஆடிக் கிருத்திகை, கந்த சஷ்டி, கார்த்திகை தீபம், தைப்பூசம், பங்குனி உத்திரம்.

* `முருக' எனும் பதத்தில் முகுந்தன், ருத்ரன், கமலன் இணைந்துள்ளனர். இந்த மூவரில் முகுந்தனின் மார்பில் திருமகளும், ருத்ரனின் இடபாகத்தில் பார்வதியும், கமலனின் நாவில் கலைவாணியும் திகழ்கிறார்கள். ஆக முருகனைக் கும்பிட்டால் ஆறு தெய்வங்களை வழிபட்ட பலன் ஒருங்கே கிடைக்கும்.

நாமும் ஆறுமுகனுக்கு ஆலயங்களில் நிகழும்... அபிஷேகம், ஆராதனை, அர்ச்சனை, அலங்காரம், நிவேதனம், வேள்வி ஆகிய 6 வழிபாடுகளிலும் கலந்துகொண்டு வழிபட்டு வரம் பெறுவோம்!

பவரோக வைத்தியநாத பெருமாளே!

காஞ்சி மகாபெரியவரின் திருவாக்குப்படி வீடுகளில் முருகனுக்குத் தேன் கலந்த தினை மாவு நிவேதித்து வழிபட்டால் நம் மனம் மலர்ச்சி யாகும். நெய் இட்டு மாவிளக்கு ஏற்றி வழிபட்டால், அவன் நமக்குள் ஞானச் சுடராகி நம் வாழ்வில் ஒளியேற்றுவான்.

நடப்புச் சூழலில் நம்மை வாட்டும் பெருந்தொற்றின் பாதிப்புகள் விலகிட, கீழ்க்காணும் திருப்புகழைப் பாடி முருகனை வழிபட்டு இன்னல் நீங்கப் பெறுவோம்.


'பலகாலும் உனைத் தொழுவோர்கள்

மறவாமல் திருப்புகழ் கூறி

படிமீது துதித்து உடன் வாழ அருள்வேளே!

பதியான திருத்தணி மேவு

சிவலோகம் எனப்பரிவு ஏறு

பவரோக வயித்திய நாத பெருமாளே!'

Powered by Blogger.