திருமணத் தடை நீக்கும் கொடுமுடி மகுடேஸ்வரர்

திருமணத் தடை நீக்கும் கொடுமுடி மகுடேஸ்வரர் || kodumudi magudeswarar temple

இந்த ஆலயத்தில் ராகு-கேதுவால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபாடு செய்தால், அந்த தோஷங்கள் விரைவில் நீங்கும். மேலும் திருமணத் தடை உள்ளவர்களும் இங்கு வந்து வழிபடுகிறார்கள்.


கொடுமுடி மகுடேஸ்வரர்


ஈரோடு மாவட்டத்தில் அமைந்திருக்கும் புண்ணிய தலமாக கொடுமுடி திருத்தலம் திகழ்கிறது. இந்த ஆலயத்தில் சிவன், பிரம்மா, திருமால் ஆகிய மும்மூர்த்திகளும் கோவில் கொண்டிருக்கும் ஒரே ஆலயமாக இது விளங்குகிறது. திருவண்ணாமலையில் மலையே சிவனாக இருப்பதாக ஐதீகம். அதுபோல இங்கு மலையின் முடியே சிவலிங்கமாக காட்சியளிப்பதால், இது ‘கொடுமுடி’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு எழுந்தருளியுள்ள சிவபெருமானை ‘மகுடேஸ்வரர்’ என்று அழைக்கிறார்கள். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாவார். மகுடேஸ்வரரின் திருக்கல்யாணத்தைக் காண்பதற்காக, படைப்புக் கடவுளான பிரம்மதேவனும், காக்கும் கடவுளான திருமாலும் இந்தத் திருத்தலத்திற்கு வந்ததாக தல வரலாறு சொல்கிறது.

இந்த ஆலயத்தில் ராகு-கேதுவால் பாதிககப்பட்டவர்கள் வழிபாடு செய்தால், அந்த தோஷங்கள் விரைவில் நீங்கும். மேலும் திருமணத் தடை உள்ளவர்களும் இங்கு வந்து வழிபடுகிறார்கள். குழந்தைப் பேறு கிடைக்கவும் வழிபடுபவர்களின் எண்ணிக்கை ஏராளம். நாக தோஷம் இருப்பவர்கள், வன்னி மரத்தடியில் கல்லால் செய்யப்பட்ட நாகரை பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

இந்தக் கோவிலில் வேப்பமரமும், அரசமரமும் இணைந்துள்ள மரத்தடியில் விநாயகர் வீற்றிருக்கிறார். இவருக்கு காவிரியில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமண வரமும், குழந்தை வரமும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

ஈரோட்டில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் கொடுமுடி உள்ளது. கோவிலின் அருகிலேயே ரெயில் நிலையம் அமைந்து உள்ளதால், வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்கள் வந்து செல்ல ஏதுவாக உள்ளது.

Powered by Blogger.