மார்கழி 22ஆம் நாள் - ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 22: அங்கண்மா ஞாலத்தரசர்
ஆண்டாளின் திருப்பாவைப் பாசுரங்களில், முந்தைய பாடல்களில் கண்ணனையும் நப்பின்னையையும் எழுப்பி வேண்டிய பிறகு, இப்போது 22ஆம் பாசுரத்தில் கண்ணனின் அருள் பார்வையை வேண்டி, அவன் கண்களின் மகிமையைப் போற்றுகிறார். உலக வீரர்களும் மன்னர்களும் கண்ணனின் பள்ளிக் கட்டிலைச் சுற்றி காத்திருப்பது போல், தோழியரும் அவன் அருளுக்காகக் காத்திருப்பதை அழகாக விவரிக்கிறார். இறைவனின் ஒரு பார்வை மட்டுமே பாவங்களையும் சாபங்களையும் தீர்க்கும் சக்தி கொண்டது என்பதை இப்பாசுரம் ஆழமாக உணர்த்துகிறது.
திருப்பாவை பாசுரம் 22:
அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போலே
செங்கண் சிறுசிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.
பொருள்:
இந்த அழகிய பெரிய உலகின் மன்னர்களும் வீரர்களும், தோல்வி அடையாமல் உன் பள்ளிக் கட்டிலைச் சுற்றி, சங்கு ஊதுபவர்கள் போல் வந்து தலை வணங்கி நிற்கின்றனர். நாங்களும் அவ்வாறே உன் அருளுக்காகக் காத்திருக்கிறோம். சிறிய மணி போன்ற வாயையும், தாமரை மலர் போன்ற சிவந்த கண்களையும் உடைய கண்ணா! உன் அழகிய சிறு கண்களை மெதுவாகத் திறந்து, எங்கள்மீது கருணை பார்வையைச் செலுத்து. சந்திரனும் சூரியனும் உதயமாகும் போல், உன் இரு கண்களும் ஒளிவீசி எங்களை நோக்கினால், எங்கள் மீதுள்ள அனைத்துச் சாபங்களும் பாவங்களும் உடனடியாக நீங்கிவிடும்.
விளக்கம்:
இறைவனின் அருள் பார்வைக்கு அளவுகடந்த சக்தி உண்டு. ஒரு பார்வை மட்டுமே போதும், உயிர்களின் பழைய பாவங்களையும் சாபங்களையும் அழித்துவிடும் என்கிறார் ஆண்டாள். நவகிரகங்களின் பார்வைக்கே வலிமை உண்டு என்றால், உலகைக் காக்கும் மகாவிஷ்ணுவின் பார்வைக்கு எத்தனை சக்தி இருக்கும்? ராமாவதாரத்தில் அகலிகை கல்லாக இருந்தவள், ராமரின் திருவடி பட்டதும் சாபம் நீங்கிப் பெண்ணானாள். அதுபோல், குலசேகராழ்வார் திருவடியைப் போற்றி, கல்லாகப் பிறந்தாலும் அடியார்களின் பாதம் படும் படியாக இருக்க வேண்டுமென வேண்டினார் – அதுவே இன்று கோயில்களில் "குலசேகரப் படி" என்று அழைக்கப்படுகிறது. இறைவனின் கண் பார்வையும் திருவடியும் அத்துணை மகிமை வாய்ந்தவை என்பதை ஆண்டாள் அழகாக உணர்த்துகிறார். மார்கழியில் இப்பாசுரத்தைப் பாராயணம் செய்து வழிபட்டால், பாவங்கள் நீங்கி இறை அருள் பெருகும்.
