மார்கழி 5-ஆம் நாள் - ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 5: மாயனை மன்னு வடமதுரை
ஆண்டாளின் திருப்பாவைப் பாசுரங்களில் ஐந்தாவது பாடல், இறைவனின் அற்புதங்களையும் அவனது திருத்தலங்களையும் போற்றி, உண்மையான பக்தியின் மூலம் பாவங்கள் அழியும் என்பதை அழகாக எடுத்துரைக்கிறது. மார்கழி மாதத்தின் ஐந்தாம் நாளில் இப்பாசுரத்தைப் பாராயணம் செய்து, கண்ணனை மனதார வணங்கினால், இதுவரையிலான தவறுகளும் எதிர்கால பிழைகளும் அழிந்து போகும் என்பது இதன் சிறப்பு.
திருப்பாவை பாசுரம் 5:
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி-விளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது
வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பு ஏலோர் எம்பாவாய்.
பொருள்:
அதிசயங்களை நிகழ்த்தும் மாயக்கண்ணனை, என்றும் நிலையான வடமதுரையின் இளவரசனை, தூய்மையான பெரிய நீரோடையான யமுனை நதிக்கரையில் வாழ்பவனை, ஆயர்குலத்திற்கு அழகிய ஒளியாகத் தோன்றியவனை, தன் தாயாரான யசோதைக்கு உள்ளத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்திய தாமோதரனை நாம் தூய்மையான மனதுடன் அணுகி, நறுமலர்களைத் தூவி வழிபட்டு, வாயால் அவன் புகழைப் பாடி, மனதில் அவனையே நினைத்து வணங்குவோம். அவ்வாறு செய்தால், நாம் இதுவரை செய்த பாவங்களும், இனி தெரியாமல் நிகழப்போகும் தவறுகளும் நெருப்பில் விழுந்த பஞ்சுபோல் உடனடியாகச் சாம்பலாகி அழிந்துவிடும்.
விளக்கம்:
இப்பாசுரத்தில் ஆண்டாள், கிருஷ்ணாவதாரத்தின் பல்வேறு அம்சங்களை அடுக்கடுக்காகப் போற்றுகிறார். வடமதுரையில் பிறந்து, யமுனை நதியில் விளையாடியவன், ஆயர்குலத்தில் அவதரித்து அக்குலத்திற்கு சிறப்பு சேர்த்தவன், யசோதையின் குடலைக் கரையவைக்கும் அளவுக்கு அன்பு செலுத்தியவன் என அவனது மகிமைகளை விவரிக்கிறார். உண்மையான பக்தியுடன் – தூய்மை, மலர்தூவி வழிபாடு, பாடல், மனநினைவு – இறைவனை அண்டினால், எல்லாப் பாவங்களும் அழிந்து போகும் என்பதை உறுதியாகக் கூறுகிறார். இது பாவை நோன்பின் ஆழமான பக்தி மார்க்கத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது. மார்கழி மாதத்தில் இப்பாசுரத்தை உருக்கமாகப் பாடி வழிபட்டால், இறை அருள் பெருகி, மனத் தூய்மை கிடைக்கும் என்பது ஐதீகம்.
