மார்கழி 2-ஆம் நாள் - ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 2: வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவை
ஆண்டாள் என அழைக்கப்படும் கோதை நாச்சியார், ஸ்ரீகிருஷ்ணரை மனதில் நிறுத்தி இயற்றிய 30 பாசுரங்களே திருப்பாவை ஆகும். இவை ஆண்டாள் பாசுரங்கள் என்றும் பெருமையுடன் குறிப்பிடப்படுகின்றன. மார்கழி மாதத்தின் ஒவ்வொரு நாளும் ஒரு பாசுரம் பாடி, தோழியருடன் பாவை நோன்பு இருந்து, இறைவனின் திருவடியை அடையும் வழியை ஆண்டாள் காட்டுகிறார். பாவை நோன்பின் நெறிமுறைகளையும் இப்பாசுரங்கள் மூலம் உலகிற்கு உணர்த்துகிறார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் தோன்றிய ஆண்டாள், மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்து, இறுதியில் ஸ்ரீரங்கநாதருடன் ஒன்றியதாக புராணங்கள் கூறுகின்றன. இந்த புனித மார்கழி மாதத்தில் திருப்பாவை பாசுரங்களைப் பாராயணம் செய்து திருமாலை வழிபட்டால், ஆண்டாளைப் போலவே இறை அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
திருமணத் தடை நீங்க விரும்புபவர்கள், குடும்ப நலன் வேண்டுபவர்கள், பெண்கள் மற்றும் ஆண்கள் என யாரும் இந்நோன்பை இருக்கலாம்.
திருப்பாவை பாசுரம் 2:
வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலை நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தானையும் கை காட்டி
உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்
பொருள்:உலகில் வாழும் அனைவரே! நாம் பாவை நோன்பு இருக்கும் முறைகளையும், செய்ய வேண்டிய கடமைகளையும் கவனமாகக் கேளுங்கள். பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பரம்பொருளின் திருவடிகளைப் போற்றிப் பாடி, அவன் திருநாமங்களை உச்சரித்தபடி இருக்க வேண்டும். நெய், பால் போன்ற சுவையான உணவுகளைத் தவிர்த்து, தினந்தோறும் அதிகாலையில் நீராட வேண்டும். கண்ணுக்கு மை இடுவது, மலர்கள் சூடுவது போன்ற அலங்காரங்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும்.
கூடாதவற்றைத் தவிர்த்து, கூடியவற்றை மட்டும் செய்வோம். தீய சொற்களைப் பேசாமல், ஏழைகளுக்கும் அந்தணர்களுக்கும் தானம் வழங்குவோம். எப்போதும் இறைவனின் அருளால் உய்வு அடையும் வழியையே நினைத்து, மகிழ்ச்சியுடன் இந்நோன்பை நிறைவேற்றுவோம்.
விளக்கம்:எந்த ஒரு செயலுக்கும் சில நெறிமுறைகளும் விதிகளும் உண்டு. என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதைத் தெளிவாகக் கடைப்பிடிக்க வேண்டும். அதுபோலவே, பக்தி மார்க்கத்திலும் விரத நியமங்களும் உள்ளன. பாவை நோன்பை எப்படி ஆரம்பிப்பது, எவ்வாறு கடைப்பிடிப்பது, என்னென்ன விதிகளைப் பின்பற்றுவது என்பதை ஆண்டாள் இப்பாசுரத்தில் விளக்குகிறார். தீய எண்ணங்களை அகற்றி, நல்லவற்றை மட்டும் சிந்திப்பதே மனத் தூய்மையைத் தரும். இறைவனின் திருவடியை அடையவே இந்நோன்பு என்பதை ஆண்டாள் அழகாக உணர்த்துகிறார்.
