மார்கழி 29-ஆம் நாள் - திருப்பாவை 29-ஆம் பாசுரம்: சிற்றஞ்சிறு காலே வந்துன்னைச் சேவித்துன் பொற்றாமரையடியே
மார்கழி மாதத்தின் தனிச்சிறப்பே ஆண்டாளின் திருப்பாவை பாடல்கள் தான். மார்கழி மாதத்தில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் சுப்ரபாதத்திற்கு பதிலாக ஆண்டாளின் பாசுரங்களை இசைக்கின்றனர். அதைக் கேட்டே பெருமாள் துயில் எழும் பழக்கம் உள்ளது. பன்னிரு ஆழ்வார்களில் ஆண்டாள் பாடிய திருப்பாசுரங்களுக்கு மட்டுமே இந்த தனிச்சிறப்பு உண்டு.
திருப்பாவை பாசுரங்களில் பாவை நோம்பு குறித்தும், அதன் பலன்கள் குறித்தும் குறிப்பிட்டுள்ளார் ஆண்டாள் நாச்சியார். பாவை நோன்பை நிறைவு செய்யும் போது கண்ணனின் அருளை வேண்டி நிற்கின்றனர் ஆயர்குல பெண்கள். கண்ணனுக்கு சேவை செய்வதைத் தவிர, இன்னும் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் வேறு எந்த பாக்கியமும் வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கின்றனர். கண்ணன் மீது இருக்கும் பற்று, பக்தியைத் தவிர மற்ற உலக இன்பங்கள் மீது இருக்கும் பந்த பாசங்கள் அனைத்தையும் நீக்கி விட வேண்டும் என்றும், தங்களின் விரதத்தில் இருக்கும் குறைகளை ஏற்றுக் கொண்டு விரதத்திற்கான பலன்களைத் தர வேண்டும் என்றும் கண்ணனிடம் மன்றாடிக் கேட்டுக் கொள்கின்றனர்.
திருப்பாவை பாடல் 29:
சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்!
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.
பொருள்:
உன்னுடைய அழகிய பொன்னான பாதங்களை கண்டு தரிசித்து வணங்குவதற்காக அதிகாலையிலேயே வந்திருக்கிறோம். நாங்கள் உன்னை போற்றி பாட வந்ததற்கான காரணத்தை கேள். பசுக்களை மேய்த்து பிழைக்கும் ஆயர்குலத்தில் பிறந்த நீ, எங்களது இந்த சிறிய விரதத்தில் ஏதாவது குறை இருந்தாலும் அதை மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டும். எங்களின் விரதத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிடாதே. நீ தரும் சிறு பொருட்களுக்காக இந்த விரதத்தை மேற்கொள்ளவில்லை. என்றென்றைக்கும், ஏழு பிறவிகளிலும் நீ எங்கள் குலத்தில் பிறக்க வேண்டும். எங்களை உன்னுடைய உறவினர்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும். உனக்கு மட்டுமே என்றென்றைக்கும் சேவை செய்யும் பெரும் பாக்கியத்தை தர வேண்டும். உன்னைத் தவிர மற்ற பொருட்கள் உள்ளிட்ட மற்றவற்றின் மீதான ஆசைகள் அனைத்தையும் நீ அழித்து, எங்களின் மனதில் இருக்கும் உலக இன்பங்களின் மீதான பற்றுகளை மாற்றி விடு.
